கடந்த 2010-ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் அரங்கையே உலுக்கிய பாகிஸ்தான் வீரர்களின் ‘ஸ்பாட் பிக்சிங்’ விவகாரம் குறித்து, முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் தற்போது பகிர்ந்துள்ள தகவல்கள் கிரிக்கெட் உலகில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அப்துல் ரசாக், இந்த ஊழல் விவகாரம் எப்படித் தனது கவனத்திற்கு வந்தது என்பதை விவரித்தார். லண்டனில் மொபைல் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்த தனது நண்பர் ஒருவரிடம், சூதாட்டத் தரகர் மசார் மஜித் தனது பழுதான அலைபேசியைக் கொடுத்திருந்தார். அந்த அலைபேசியைத் சரிசெய்தபோது, அதில் மஜிதிற்கும், பாகிஸ்தான் வீரர்களான சல்மான் பட், முகமது ஆமிர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோருக்கும் இடையே நடைபெற்ற குறுஞ்செய்தி உரையாடல்களை அந்த நண்பர் பார்த்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கான திட்டங்கள் அதில் இருந்தன. இந்த அதிர்ச்சிகரமான தகவலை அந்த நண்பர் ரசாக்கிடம் தெரிவித்தார்.

 இந்தத் தகவலை அறிந்ததும், அப்போதைய ஒருநாள் மற்றும் டி-20 அணித் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, 18 வயதான முகமது அமிரை தனது அறைக்கு அழைத்து விசாரித்துள்ளார். அப்போது அந்த அறையின் வெளியே தான் காத்திருந்ததாகக் கூறும் ரசாக், உள்ளே நடந்தவற்றைத் தத்ரூபமாக விவரித்தார்.

“அஃப்ரிடி பலமுறை கேட்டும், ஆமிர் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஃப்ரிடி, அமிருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார். அந்தத் தடியடியைக் கண்டதும் அமிர் உடைந்து போய் அழுதார். பின்னர், தான் செய்த தவறுகளையும், பிக்சிங் திட்டத்தையும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொண்டார்,” என்று ரசாக் கூறினார்.

இந்த விவகாரம் ஐசிசி (ICC) வரை சென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெயர் கெட்டுவிடும் என்று கருதிய அணியின் மூத்த வீரர்கள் சிலர், இந்த விவகாரத்தை அணிக்குள்ளேயே முடிக்க முயன்றதாக ரசாக் குற்றம் சாட்டினார். “இந்த வீரர்களுக்கு அபராதம் விதித்து, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் உடனடியாக நாட்டுக்கு அனுப்பி விடலாம்” என்று அந்த சீனியர் வீரர்கள் ஆலோசித்தனர். ஆனால், இறுதியில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட வீரர்களுக்கும், தரகர் மசார் மஜிதிற்கும் சிறைத்தண்டனை கிடைத்தது.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கறைபடிந்த அந்த நாட்களை, பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரசாக் வெளிப்படையாகப் பேசியிருப்பது தற்போதைய கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.