2026-ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று நாடு திரும்பிய நிலையில், அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ரயிலில் எளிய பயணம் மேற்கொண்ட நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் துபே ரயிலில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

உலகக் கோப்பை வெற்றியின் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, தனது குடும்பத்துடன் மும்பைக்குத் திரும்பத் திட்டமிட்ட ஷிவம் துபே, விமானத்தில் வராமல் அகமதாபாத் – மும்பை சயாஜி எக்ஸ்பிரஸ் ரயிலின் ‘தேர்டு ஏசி’ (3AC) வகுப்பில் பயணிக்க முடிவு செய்தார். கிரிக்கெட் நட்சத்திரமான அவர், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தனது மனைவி அஞ்சுமோடு இணைந்து ஒரு திட்டத்தை வகுத்தார்.

அதன்படி பயணத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை ஷிவம் துபே பகிர்ந்து கொண்டார். “ரயிலில் டிக்கெட் பரிசோதகர் (TTE) வந்து பெயர்ப் பட்டியலில் என் பெயரைப் பார்த்துவிட்டு, ‘ஷிவம் துபேவா? அந்த கிரிக்கெட் வீரரா?’ என்று கேட்டார். அந்த நொடி நான் மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தேன். ஆனால், என் மனைவி அஞ்சும் சமயோசிதமாக, ‘இல்லை, இல்லை… அவர் எப்படி இங்கே வருவார்?’ என்று பதிலளித்தார். அவரது பதிலால் டிடிஇ சந்தேகமின்றி கிளம்பிச் சென்றார்,” என்று ஷிவம் தெரிவித்தார்.

அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் ஷிவம் மிகவும் கவனமாக இருந்தார். ரயில் கிளம்புவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்புதான் அவர் காரிலிருந்து இறங்கி ரயிலில் ஏறினார். ரயில் ஏறியதும் நேராக மேல் பர்த்திற்கு சென்று படுத்துக்கொண்டார். எட்டு மணி நேரப் பயணத்தின் போது, கழிவறைக்குச் செல்வதற்குக் கூட அவர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டார். யாருக்கும் தெரியாமல் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்தது தனக்கே வியப்பாக இருந்ததாக அவர் கூறினார்.

ரயில் பயணம் முடிந்து போரிவிலி ரயில் நிலையத்தில் இறங்கியபோது, அங்கிருந்த கூட்டத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும் என அஞ்சிய ஷிவம், முன்கூட்டியே காவல்துறையினரின் உதவியை நாடியிருந்தார். தான் விமான நிலையத்திற்கு வராமல் ரயிலில் வருவதைக் கேட்டு காவல்துறையினரே ஆச்சரியமடைந்தனர். இறுதியில், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் ஷிவம் துபே பத்திரமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி தனது இல்லத்திற்குச் சென்றார்.

மேலும் இந்தச் செய்தி குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் விரிவாகக் கட்டுரை வெளியிட்டுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர், எவ்வித ஆடம்பரமும் இன்றி சாதாரண ரயிலில் பயணித்த இந்தச் செயல், பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.