டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்ற நிலையில், மைதானத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது தோழி மஹிகா சர்மா ஆகியோரின் தனிப்பட்ட கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

மைதானம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், ஹர்திக் பாண்டியாவின் தோழி மஹிகா சர்மா மைதானத்திற்குள் ஓடிவந்து ஹர்திக்கை கட்டித்தழுவி, அவரது கன்னத்தில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து வெளியான மற்றொரு வீடியோ, இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. வெற்றி மேடையில் ஹர்திக் பாண்டியாவும், மஹிகா சர்மாவும் அருகருகே படுத்துக்கொண்டு வெற்றிக் கொண்டாட்டங்களை ரசிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

சுற்றிலும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வெற்றியைத் தாரை தப்பட்டையுடன் கொண்டாடிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் மேடையில் படுத்திருந்தது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. “வெற்றி மேடை என்பது அணியின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் புனிதமான இடம், அங்கு இத்தகைய செயல்கள் கண்ணியக் குறைவாக உள்ளது,” என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும், ஹர்திக் பாண்டியாவின் ஆதரவாளர்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். “தொடர் முழுவதும் கடும் அழுத்தத்தில் இருந்த ஒரு வீரர், தனது மிகச்சிறந்த வெற்றித் தருணத்தை தனது துணையுடன் இயற்கையாகப் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; இது ஒரு எதார்த்தமான கொண்டாட்டமே,” என்று அவர்கள் வாதிடுகின்றனர். மேலும் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், ஹர்திக் – மஹிகா ஜோடியின் இந்தத் தன்னிச்சையான செயல் சமூக வலைதளங்களில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.