டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பல்வேறு புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. அதாவது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

மேலும், உலகக் கோப்பை தொடரைத் தனது சொந்த மண்ணில் (தாய்நாடு) வென்ற முதல் அணி என்ற சாதனையையும், கோப்பையைத் தக்கவைத்துத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

 வெற்றிக்குப் பிறகு தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “தற்போது இந்த வெற்றிக் கொண்டாட்டங்களை அனுபவிக்க விரும்புகிறேன். வீட்டிற்குச் சென்று சுவையான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு நாட்கள் நிம்மதியாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பதே எனது உடனடி திட்டம். அதன் பிறகு, ஐபிஎல் தொடர் மற்றும் வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகளையும் ஆயத்தப் பணிகளையும் மீண்டும் தொடங்குவேன்,” என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார். மேலும் தாய்நாட்டில் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.