டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டியின்போது, இந்திய அணியின் 11-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது பேட்டிங் செய்த நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் பந்தை பவுலர் திசையை நோக்கி அடித்தார்.

பந்தை பிடித்த அர்ஷ்தீப் சிங், உடனடியாக அதை மிட்செலை நோக்கி வீசினார். எதிர்பாராதவிதமாக பந்து மிட்செல்லின் தொடையில் பலமாகப் பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மிட்செல், அர்ஷ்தீப் சிங்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சூழல் மோதலாக மாறவே, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடனடியாக குறுக்கிட்டு மிட்செலை அமைதிப்படுத்தினார். அம்பயர்கள் இரு வீரர்களையும் அழைத்து கடுமையாக எச்சரித்தனர்.

இருப்பினும், போட்டி முடிவடைந்த பிறகு அர்ஷ்தீப் சிங், டேரில் மிட்செல்லிடம் நேரில் சென்று தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்தது. இருப்பினும், ஐசிசியின் நடத்தை விதிகளின்படி வீரர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதாகக் கூறி, அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.