மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுத்தால், அந்த நாடு மீண்டெழ முடியாத அளவுக்கு இருபது மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
மேலும், ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டதற்கும் அவர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, புதிய தலைவர் நிம்மதியாக வாழ முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ள அலி லாரிஜானி, “உங்களை விடப் பெரியவர்களால் கூட ஈரானை ஒழிக்க முடியவில்லை; நீங்களே ஒழிக்கப்படலாம், கவனமாக இருங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அமெரிக்காவின் தலையீட்டை ஈரான் முற்றிலுமாக நிராகரித்தது ட்ரம்ப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இந்த அரசியல் மோதல்களுக்கு நடுவே, வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது போர் 11-வது நாளை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவி வருகிறது. இவற்றை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தி வரும் நிலையில், அங்கு அபாயச் சங்கொலிகள் முழங்கி வருகின்றன. இந்தத் தொடர் மோதல்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய வர்த்தக நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
