மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” (Operation Midnight Hammer) என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் அணுசக்தி ஆற்றல் மற்றும் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 11 நாட்களில் அமெரிக்க ராணுவம் ஈரானின் வான் பாதுகாப்பு அரண்களைச் சிதைத்து, அந்த நாட்டை ஒரு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

​இது குறித்து மேலும் பேசிய டிரம்ப், “ஈரானின் விமானப்படை இப்போது வரலாறாக மாறிவிட்டது. அவர்களிடம் இப்போது ரேடார் இல்லை, ஏவுகணை எதிர்ப்பு உபகரணங்கள் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் அணுசக்தி ஆற்றல் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது” என அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும், உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த ஈரானின் ட்ரோன் தயாரிப்பு தொழிற்சாலைகளும் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த மின்னல் வேகத் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.