உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பற்றாக்குறையைச் சரிசெய்யும் நோக்கில், ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் லேவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியா ஒரு சிறந்த கூட்டாளியாகவும், பொறுப்புள்ள நாடாகவும் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு கருவூலத் துறை மற்றும் தேசிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டே இந்தத் தற்காலிக விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா எப்போதும் அமெரிக்காவின் தடைகளை மதித்துச் செயல்பட்டு வருவதாகவும், சர்வதேச விவகாரங்களில் ஒரு ‘நல்ல ஆட்டக்காரராக’ (Good actor) இந்தியா செயல்படுவதாகவும் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் இந்த எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே கடல் மார்க்கத்தில் உள்ளவை. இந்த நடவடிக்கையின் மூலம் ரஷ்ய அரசுக்கு எந்தவொரு பெரிய நிதி ஆதாயமும் கிடைக்காது என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் முன்னதாக அளித்த பேட்டியில், “இந்தியாவை ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கக் கேட்டிருந்தோம், அவர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். அமெரிக்க எண்ணெயை இறக்குமதி செய்யத் தயாராக இருந்த இந்தியாவுக்கு, சந்தையில் ஏற்பட்டுள்ள தற்காலிக இடைவெளியை ஈடுகட்ட தற்போது ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
