ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ‘மயூரி நாரீ’ (Mayuree Naree) என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கோரமான தாக்குதலில் கப்பலின் இயந்திர அறையில் சிக்கிய மூன்று மாலுமிகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘மயூரி நாரீ’ சரக்குக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு குஜராத் துறைமுகம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது, ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணை அல்லது டிரோன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, கப்பலில் இருந்த 20 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும், தாக்குதலின் போது கப்பலின் என்ஜின் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று பேர் தீப்பற்றி எரிந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச கடல் எல்லைகளில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை. தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்து வருவது சர்வதேச வர்த்தகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய வன்முறைச் செயல்கள் உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும். கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்தியாவை நோக்கி வந்த கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச கடல்சார் அமைப்புகளும் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளன.