பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில் துரித உணவுகளைச் சாப்பிட்ட 9 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன் ஆகிய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தானிகா மற்றும் ஆரவ் ஆகிய அந்த இரு குழந்தைகளும் சனிக்கிழமை இரவு தங்களின் விருப்பப்படி வெளியில் இருந்து வாங்கப்பட்ட மோமோஸ் மற்றும் சோயா உணவுகளைச் சாப்பிட்டுள்ளனர்.
உணவு உண்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் உறங்கச் சென்றுள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் குழந்தைகள் எழாததால் பெற்றோர் சென்று பார்த்தபோது இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உயிரிழந்த குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறியிருந்ததால் அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுடன் சேர்ந்து அதே உணவைச் சாப்பிட்ட அவர்களின் தாய்க்கு எவ்வித உடல்நலப் பாதிப்பும் ஏற்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மாதிரிகளைச் சேகரித்துள்ள நிலையில் குழந்தைகளின் தந்தை கடந்த சில காலமாகக் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது உணவினால் ஏற்பட்ட விஷ பாதிப்பா அல்லது குடும்பத் தகராறு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
