புதிய மெத்த விரிப்பைப் பயன்படுத்திய நபர் ஒருவர் உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய விசித்திரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டொமி லிஞ்ச் என்ற 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது நண்பர் பரிசளித்த அடர் நீல நிறத்திலான புதிய மெத்த விரிப்பைத் துவைக்காமல் அப்படியே பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு இரவுகள் அந்த விரிப்பில் உறங்கிய அவர் மூன்றாவது நாள் மதியம் எழுந்தபோது அவரது உடல் உச்சி முதல் உள்ளங்கால் வரை பிரகாசமான நீல நிறத்தில் மாறியிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தில் அவரது நண்பர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டதோ என்று கருதி அவருக்குச் செயற்கை சுவாசக் கருவிகளைப் பொருத்தினர். ஆனால் மருத்துவர் ஒருவர் அவரது கையை ஆல்கஹால் கலந்த துணியால் துடைத்தபோது அந்தத் துணி நீல நிறமாக மாறியதைக் கண்டு உண்மை நிலவரம் தெரியவந்தது.

மெத்த விரிப்பில் இருந்த சாயம் அவரது உடல் முழுவதும் ஒட்டிக் கொண்டதை உணர்ந்த மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் இந்தச் சம்பவத்தைக் கேட்டுச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போயினர்.

வீட்டிற்குச் சென்ற பிறகும் அந்த நீல நிறம் மறைய ஒரு வாரம் ஆனதாகக் குறிப்பிட்ட அந்த நபர் புதிய துணிகளைப் பயன்படுத்தும் முன் அவற்றைத் துவைக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.