பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தாத்தா பயன்படுத்திய பழைய சுழலும் டயல் கொண்ட தொலைபேசியை நவீன அசிஸ்டெண்டாக மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வெறும் ரூ.2,307 செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த புதுமையான முயற்சியில், பழைய காலத்து தொலைபேசியின் தோற்றத்தை மாற்றாமல், அதற்குள் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளார்.
இதற்காக அவர் ‘ரஸ்பெர்ரி பை’ போன்ற நுண்செயலிகள் மற்றும் ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குரல் வழி கட்டளைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த போனை வடிவமைத்துள்ளார். இந்த விண்டேஜ் போனில் டயல் செய்யும் போது, அது சாதாரணமாக அழைப்புகளை மேற்கொள்ளாமல், நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு அறிவார்ந்த இயந்திரமாகச் செயல்படுகிறது.
இந்நிலையில் பழமையையும் புதுமையையும் இணைத்த இந்த படைப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய முதலீடு இன்றி, கையில் இருக்கும் பழைய பொருட்களைக் கொண்டே பயனுள்ள நவீன சாதனங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த இளைஞரின் முயற்சி ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
