உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் பணியாற்றி வந்த பிரியங்கா என்ற 28 வயது செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதியானது.

பிரியங்காவும் அவரது கணவர் சுனிலும் செவிலியர்களாகப் பணிபுரிந்து வந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அடிக்கடி சண்டையிடும் பழக்கம் கொண்ட சுனில், பிரியங்காவைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரியங்காவின் செல்போனை ஆய்வு செய்த போலீசாருக்கு ஒரு சோகமான உண்மை தெரியவந்தது. உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தனது கணவரைச் சமாதானப்படுத்த பிரியங்கா போராடியுள்ளார்.

ஒரே இரவில் சுமார் 63 வாட்ஸ்அப் அழைப்புகள், 47 குறுஞ்செய்திகள் மற்றும் ஒரு குரல் பதிவை அவர் சுனிலுக்கு அனுப்பியுள்ளார். அவற்றில் தனது தவறுகளை மன்னித்துக்கொள்ளுமாறு அவர் கெஞ்சியுள்ளார்.

ஆனால், சுனில் ஒரு அழைப்பைக்கூட ஏற்கவில்லை. பிரியங்காவின் மரணத்திற்கு அவரது கணவரின் சித்திரவதையே காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய போலீசார் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.