பெங்களூருவைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர், முகநூல் மூலம் பழகிய இளம் பெண்ணால் பல லட்சம் ரூபாய் இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் முதியவரிடம் நெருக்கமாகப் பழகி, வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது முதியவரின் அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்த அந்தப் பெண், அதைக் காட்டி மிரட்டி முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளார்.
தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியபோது, முதியவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப் பெண் அந்த வீடியோக்களை முதியவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, முதியவர் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இது குறித்து முதியவரின் மருமகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், அந்தப் பெண்ணின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட பெண்ணை விரைவில் கைது செய்வதாகப் போலீசார் உறுதி அளித்துள்ளனர். முதியவர்களைக் குறிவைத்து நடக்கும் இந்த ‘செக்ஸ்டார்ஷன்’ வகை மோசடி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
