தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவரது மனைவி பிரசாந்தி, தனது கணவர் பெயரில் இருந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகக் கூலிப்படையை ஏவி கணவரை விபத்து ஏற்படுத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரவி அடிக்கடி தனது மனைவியைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரவி விரைவில் இறந்துவிடுவார் எனக் கருதி அவர் பெயரில் பிரசாந்தி காப்பீடு செய்துள்ளார். ஆனால் ஓராண்டு கடந்தும் அவர் உயிருடன் இருந்ததால் காப்பீட்டுப் பணத்தை உடனடியாகப் பெறத் திட்டமிட்ட பிரசாந்தி தனது உறவினர் சீனிவாஸ் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார்.

கடந்த இரண்டாம் தேதி ரவியை ஆட்டோவில் அழைத்துச் சென்ற கும்பல் அவருக்கு அதிக அளவில் மது கொடுத்துவிட்டுத் திட்டமிட்டபடி கார் ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் இது சாலை விபத்து என வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

பிரசாந்தியிடம் நடத்திய விசாரணையில் காப்பீட்டுப் பணத்திற்காக விபத்து நாடகமாடி கணவரைத் தீர்த்துக் கட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பிரசாந்தி உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.