மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மருத்துவர்களின் தவறான தகவலால் 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஹமிதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினரை அதிரவைத்துள்ளனர்.
இந்தத் தவறான தகவலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, யாரிடமும் பேசாமல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
ஆனால், மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றபோது, மாணவியின் வயிற்றில் இருந்தது ‘கர்ப்பம்’ அல்ல ‘கட்டி’ (Tumor) என்பது சோதனையில் தெரியவந்தது.
மருத்துவர்களின் இந்தத் தவறான அறிவிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலும், உடல்நலப் பாதிப்பும் சேர்ந்து சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையின் அலட்சியமே தனது மகளின் மரணத்திற்குத் காரணம் என தந்தை கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
