கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு ரூபாய் விலைக்கு காலணிகள் செருப்பு வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு, கடை திறப்பு விழாவையே போர்க்களமாக மாற்றியுள்ளது. கோழிக்கோடு வைக்கம் முகமது பஷீர் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட ‘ட்ரெண்ட் ஃபேக்டரி’ என்ற கடை, சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த விளம்பரத்தை வெளியிட்டது.

மேலும் ஒரு ரூபாய் நோட்டுடன் வரும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு விலையுயர்ந்த காலணிகள் வழங்கப்படும் என்ற ஆசையில், அதிகாலை 2 மணி முதலே நூற்றுக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் கடையின் முன் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, கடை திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றதால் பெரும் தள்ளுமுள்ளு உருவானது.

இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் கூட்டத்தில் இருந்த பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், மக்களை ஆபத்தில் தள்ளும் வகையில் இத்தகைய விளம்பரத்தை வெளியிட்டதற்காகக் கடையின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு சிறு விளம்பர யுக்தி, முறையான திட்டமிடல் இல்லாததால் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், கடை உரிமையாளர்களுக்குச் சட்டச் சிக்கலாகவும் முடிந்துள்ள இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.