சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியைச் சேர்ந்த கவின் என்பவர் சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்படுபவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இதனால் சிறுமிக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவின் அந்தச் சிறுமி என்றும் பாராமல் அவரது வயிற்றில் எட்டி உதைத்ததோடு அதனைத் தட்டிக்கேட்க வந்த சிறுமியின் தந்தையையும் தாக்கியுள்ளார். இந்தச் செயலைக் கண்டு ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களான பெண்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காசிமேடு காவல்துறையினர் கவினை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் சிறுமி மற்றும் அவரது தந்தையைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து கவின் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே சமயம் அந்த இளைஞரைத் தாக்கியதற்காகச் சிறுமியின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு இளைஞர் சிறுமி என்றும் பாராமல் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
