அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இருப்பினும், இந்த வெற்றித் தருணத்தில் வர்ணனையாளர் ரவி சாஸ்திரியின் தவறான வர்ணனை ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு வெற்றிக்கு அருகில் இருந்தது. நியூஸிலாந்து அணி 159 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 19-வது ஓவரை அபிஷேக் சர்மா வீசினார். அப்போது ஜேக்கப் டஃபி அடித்த பந்தை திலக் வர்மா கேட்ச் பிடிக்க, இந்தியா வெற்றி பெற்றது.
ஆனால், வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, அது 9-வது விக்கெட் எனத் தவறுதலாகக் குறிப்பிட்டார். “ஆழமாகப் பிடிபட்டுள்ளது, 9-வது விக்கெட் வீழ்ந்தது” என்று அவர் வர்ணனை செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அது போட்டியின் இறுதி விக்கெட் என்பதை உணர்ந்து, “இந்தியா 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது” என்று திருத்திக் கொண்டார்.
We won the world cup, waiting for iconic commentary lines and Ravi Shastri said 9th wicket goes down 😭😭#INDvNZ #T20WorldCup2026final https://t.co/5VKKhtx1dZ
— Ajinkya Chabuk (@AjinkyaChabuk) March 8, 2026
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோனியின் சிக்சர் உள்ளிட்ட பல மறக்க முடியாத தருணங்களில் தனது விறுவிறுப்பான வர்ணனையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரவி சாஸ்திரி. ஆனால், இந்த முக்கியத் தருணத்தில் அவர் செய்த இந்தத் தவறு, ரசிகர்களின் மகிழ்ச்சியைக் குறைத்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில் இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும், சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றிக்குப் பிறகு ஐசிசி தலைவர் ஜெய் ஷா, மைதானத்தில் இருந்த எம்.எஸ்.தோனியைக் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தார். மைதானத்திலும், இந்திய அணியின் டக்-அவுட்டிலும் வீரர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
