2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்து கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதிலும் அபாரமாகச் செயல்பட்டு, ‘தொடர் நாயகன்’ விருதினை வென்றுள்ள விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், தனது வெற்றிக்கான பயணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 321 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியத் தூணாகத் திகழ்ந்தவர் சஞ்சு சாம்சன். இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதும், நீண்ட நாள் கனவு நனவான மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். “இது ஒரு கனவு நனவான தருணம். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை; அந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை,” என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிக்கு பின்னால் பல வலிகள் இருந்ததை சஞ்சு வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அது குறித்து அவர் கூறுகையில், “அப்போது நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அந்த நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு மட்டுமே கடின உழைப்பைத் தொடர்ந்தேன்,” என்றார்.
குறிப்பாக, நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு தனது மனநிலை மிகவும் மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், “அந்த காலகட்டத்தில் எனது கனவுகள் உடைந்து விடுமோ என்று பயந்தேன். ஆனால், இறைவனின் திட்டம் வேறொன்றாக இருந்தது. பெரிய கனவுகளைக் காண்பதற்கான துணிச்சல் எனக்குக் கை கொடுத்தது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தனது கடினமான தருணங்களில் தனக்குத் துணையாக இருந்தவர்கள் குறித்துப் பேசுகையில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். “பல முன்னாள் வீரர்கள் எனக்குப் பக்கபலமாக இருந்தனர். கடந்த சில மாதங்களாக நான் சச்சின் சாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். அவருடன் நேரடியாகப் பேசி ஆலோசனைகளைப் பெற்றேன். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானிடமிருந்து கிடைத்த வழிகாட்டுதல், எனது தன்னம்பிக்கையை உயர்த்தியது,” என்று அவர் கூறினார். மேலும் தொடர் நாயகன் விருதினையும், உலகக்கோப்பையையும் ஏந்தியபடி சஞ்சு சாம்சன் நிற்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
