இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மைதானங்களில் ஒன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். வரலாற்றுச் சிறப்புமிக்க பல போட்டிகளுக்குச் சாட்சியாகத் திகழும் இந்த மைதானம், கிரிக்கெட் தாண்டி ஒரு வினோதமான மற்றும் மர்மமான கதையாலும் பேசப்பட்டு வருகிறது. மைதானத்தின் பழமையான ‘மேனுவல் ஸ்கோர்போர்டு’ குறித்துப் பரவும் இந்தத் தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது மின்சார வசதி இல்லாத பழைய காலங்களில், மைதானங்களில் பெரிய கரும்பலகைகளில் வீரர்கள் பெயர் மற்றும் ரன்களை ஊழியர்கள் கைகளால் மாற்றி அமைப்பார்கள். அப்போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தான் இப்போதும் மர்மமாக உள்ளது. இந்தியா-இங்கிலாந்து போட்டிக்கு முந்தைய நாள் இரவு, மைதானத்திற்குள் சென்ற பத்திரிகையாளர் ஒருவர், ஸ்கோர்போர்டில் ஒரு இந்திய வீரரின் பெயர் மற்றும் அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்தது போல எழுதப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

அடுத்த நாள் போட்டி நடந்தபோது, அதே வீரர் சரியாக 3 ரன்களில் ஆட்டமிழந்தது அந்தப் பத்திரிகையாளருக்கு அதிர்ச்சியை அளித்தது. அடுத்த இன்னிங்ஸிலும் இதேபோல நடக்க, ஆச்சரியமடைந்த அவர் இது குறித்து விசாரித்தபோது, ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Jatin (@dillimirrorr)


மைதானத்தில் பணிபுரியும் ஒரு முதியவர், “அருகிலுள்ள தெற்கு கல்லறையில் இருந்து வரும் ஒரு பிரிட்டிஷ் ஜெனரலின் ஆவிதான் இதற்குக் காரணம். இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாக விளையாடுவதை விரும்பாத அந்த ஆவி, ஸ்கோர்போர்டை மாற்றி வைப்பதாக” விசித்திரமான ஒரு தகவலைக் கூறியுள்ளார்.

இந்தக் கதை இணையத்தில் வைரலானதை அடுத்து, ரசிகர்கள் பலரும் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “அப்போ 2016 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கார்லோஸ் பிராத்வெயிட் தொடர்ந்து 4 சிக்சர்களை விளாசியபோது அந்தப் பேய் என்ன செய்துகொண்டிருந்தது?” என ஒரு பயனர் கிண்டலாகக் கேட்டுள்ளார். மேலும் சிலர், “இப்பொழுது பிறந்திருந்தால் அந்தப் பேய் ‘ட்ரீம் 11’ மூலம் கோடீஸ்வரனாகியிருக்கும்” என்றும், இது மேட்ச் பிக்ஸிங்கிற்கு ஒரு சிறந்த கதைக்களம் என்றும் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக விவாதித்து வருகின்றனர்.

மேலும் கொல்கத்தாவிலேயே வசிக்கும் சிலர் இது குறித்துக் கூறுகையில், “இந்த ஸ்கோர்போர்டில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த ஒரு ஊழியரின் ஆவிதான் அங்கிருப்பதாகப் பேச்சு உண்டு. இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் விசித்திரமான சத்தங்கள் கேட்பதும், யாரும் இல்லாதபோது ஸ்கோர்போர்டில் எண்கள் தானாக மாறுவதும் நடக்கின்றன” எனத் தெரிவிக்கின்றனர். உண்மையோ அல்லது வெறும் கட்டுக்கதையோ, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தைச் சுற்றியுள்ள இந்த ‘பேய்’ விவகாரம், கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போதும் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது.