அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தது அந்த நாட்டு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதலில், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதிகள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளும் பலியாகியுள்ளனர்.
ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் படைகள் உடனடியாக ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்துள்ள ஈரான், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வலிமை எங்களிடம் உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர்ந்து தீவிரமாகப் போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று சவால் விடுத்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிடவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மதகுருமார் கவுன்சில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. இந்த ஆலோசனையின் முடிவில், மறைந்த தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி, ஈரானின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மொஜ்தபா காமேனியின் இந்த புதிய பொறுப்பேற்பு, மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
