மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 110 டாலரைத் தாண்டியுள்ளது.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு மேல் விற்பனை ஆகிறது. ஒருவேளை போர் நீடித்தால், எண்ணெய் விலை 150 டாலரை எட்டக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விலை உயர்வு குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக நாம் கொடுக்கப்போகும் மிகச் சிறிய விலைதான் (Small Price) இந்த எண்ணெய் விலை உயர்வு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலை முழுமையாக அழிக்கும் வரை மட்டுமே இந்த விலை உயர்வு நீடிக்கும். அந்த இலக்கை அடைந்த பிறகு, எண்ணெய் விலை மிக வேகமாகத் தானாகவே குறையும். இதில் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் முட்டாள்கள் என்றும் அவர் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு இந்தியா போன்ற இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், எரிபொருள் விலை உயர்வு சாமானிய மக்களையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.