மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் கருப்பு நிறத்தில் ‘நச்சு எண்ணெய் மழை’ பெய்வதாக வெளியாகி இருக்கும் வீடியோக்கள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கியப் பகுதிகளில் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை (மார்ச் 07, 2026) அன்று தெஹ்ரானில் உள்ள எண்ணெய் ஆலைகள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் அல்போர்ஸ் (Alborz) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்தத் தாக்குதலால் அந்தப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டு, வானத்தை நோக்கி கரும்புகை சூழ்ந்தது. இதன் விளைவாகவே தற்போது விசித்திரமான கருப்பு மழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களின்படி, வானத்திலிருந்து விழும் மழைத்துளிகள் கருப்பு நிறத்தில் இருப்பதோடு, பெட்ரோலிய எண்ணெய்க்கான கடுமையான வாசனையையும் கொண்டுள்ளன.
It rain oil in Iran pic.twitter.com/8lztV6KrEY
— Daily Knowledge (@elieser20043821) March 9, 2026
அதாவது தாக்குதலில் அழிக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகளிலிருந்து வெளியேறிய ரசாயனங்கள் காற்றில் கலந்து, மழையாகப் பொழிவதாகக் கூறப்படுகிறது. இந்த மழையில் கந்தகம் (Sulfur), நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற ஆபத்தான நச்சுக்கள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நீர் உடலில் பட்டால் தோல் பாதிப்புகள் ஏற்படும் என்றும், சுவாசித்தால் நுரையீரலுக்குக் கடுமையான சேதம் ஏற்படும் என்றும் ஈரான் ரெட் கிரசண்ட் (Red Crescent) அமைப்பு எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த நச்சு மழை குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் ஈரான் அரசாங்கத்திடமிருந்து இன்னும் வரவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய போர்ச் சூழலில் இத்தகைய இயற்கை மற்றும் ரசாயன மாற்றங்கள் ஈரான் மக்களை மிகுந்த பீதியில் ஆழ்த்தியுள்ளது.
