ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு நீங்கியதால் கட்சி தற்போது தூய்மையாகிவிட்டது என்று குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் சென்ற இடம் உருப்படாது என்றும், அவர் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுவது இப்போது உறுதியாகிவிட்டதாகவும் விமர்சித்தார்.
அதிமுகவில் இருந்த தேவையற்ற களைகள் அகற்றப்பட்டுவிட்டதால், இனி கட்சி செழிப்பாக வளரும் என்றும், யாராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் அவர் தொண்டர்களிடையே எழுச்சியுடன் பேசினார். தொடர்ந்து திமுக அரசை கடுமையாக சாடிய அவர், தமிழகத்தில் ஒரு குடும்பம் மட்டுமே எட்டு கோடி மக்களையும் சுரண்டிப் பிழைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாகவும், தினந்தோறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறினார். நாட்டு மக்களுக்குத் துன்பத்தைத் தரும் இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது எனவும், வரும் தேர்தலில் இந்த குடும்ப ஆட்சியை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
