ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் மைலாரத்தில், தாலி கட்டும் கடைசி நேரத்தில் காதலன் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது அண்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், வீட்டின் எதிர்ப்பால் பெற்றோர் நிச்சயித்த வேறு ஒரு நபருடன் அவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் திருமண மண்டபத்தில் மேளதாளங்கள் முழங்க, மணமகன் தாலி கட்டத் தயாரான வேளையில், திடீரென அங்கு வந்த காதலனைக் கண்ட மணப்பெண் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். தான் காதலிப்பவருடன் மட்டுமே வாழ விரும்புவதாக அவர் உறுதியாகத் தெரிவித்ததால், மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்தத் தீடீர் திருப்பத்தால் கோபமடைந்த உறவினர்கள் மணப்பெண்ணின் காதலனைத் தாக்கத் தொடங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்ட நிலையில், திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் மகளின் இத்தகைய செயலால் நின்றதால், அவரது பெற்றோர் மிகுந்த மனவேதனையுடனும் அவமானத்துடனும் மண்டபத்தை விட்டு வெளியேறினர். சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
