மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை வரும் காலங்களில் கற்பனை செய்ய முடியாத உயரத்தை எட்டும் என்று ‘ஜாய் ஆலுக்காஸ்’ குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள், குறிப்பாக துபாய் போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.

இதனால், மக்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை அதிகளவில் நாடுவதால், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் சுமார் 75 சதவீதம் விலை உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், நுகர்வோரின் வாங்கும் முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆபரணங்களாகத் தங்கம் வாங்குவதைத் தாண்டி, இப்போது பலரும் முதலீட்டு நோக்கில் தங்கக் கட்டிகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

விலை உயர்வால் வாங்கும் திறன் சற்றே குறைந்திருந்தாலும், இந்திய கலாச்சாரத்தில் திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்குத் தங்கம் வாங்குவது ஒரு கடமையாகக் கருதப்படுவதால் விற்பனை குறையவில்லை என்றும், உலக அரசியல் சூழல் எப்படி மாறினாலும் தங்கம் எப்போதும் தனது மதிப்பை இழக்காது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.