ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவை எனப் பரவும் செய்திகள் தவறானவை. இந்தியாவின் எரிசக்தி கொள்கை என்பது நாட்டின் நலன் மற்றும் 140 கோடி மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டது.
தற்போது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 25-30 சதவீதம் ரஷ்யாவிடமிருந்தே வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் பேரல் எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் சுதந்திரமான இறக்குமதிக் கொள்கையை உறுதிப்படுத்துவதோடு, வேறு எந்த நாட்டின் அனுமதியோ கட்டுப்பாடோ இதில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியையே நம்பியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு குறைந்த விலையில் எண்ணெய் கிடைத்ததால், நடுத்தர மக்களின் நலன் கருதி இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கொள்முதல் செய்யத் தொடங்கியது.
அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் இந்தியா தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும், அதை ‘அனுமதி’ பெறுவதாகக் கருத முடியாது.
சர்வதேச சந்தையில் விலையேற்றம் மற்றும் பணவீக்கத்திலிருந்து மக்களைக் காக்க, தேசிய நலனை முன்னிறுத்தி இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளது.
