ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை உறுதி செய்ய, ரஷ்யாவிடமிருந்து அடுத்த 30 நாட்களுக்கு எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு தனது எரிசக்தி இருப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) இருப்பு மிகவும் திருப்திகரமாக உள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள மாற்று வழிகள் தயாராக இருப்பதாகவும் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு வரை இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் 0.2 சதவீதமாக மட்டுமே இருந்த ரஷ்யாவின் பங்கு, தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1.04 மில்லியன் பேரல்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மங்களூர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக பரவும் வதந்திகளை மறுத்துள்ள அரசு, அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் முழு வீச்சில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் இந்தியாவிலேயே பயன்படுத்தவும், எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
