வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஓட்டேரிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 26 வயது இளைஞர் மின்சாரப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சந்தோஷ் கடந்த ஓராண்டிற்கு முன்பு தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்ததை மறைத்து அந்த மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷிற்குத் திருமணமான விஷயம் தெரியவந்ததும் மாணவி அவருடனான பழக்கத்தைத் துண்டித்துக் கொண்டார்.

இதனிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரிடம் தனது நிலைக்குக் காரணமான சந்தோஷ் திருமணமானதை மறைத்துக் காதலிப்பதாகக் கூறித் தன்னை ஏமாற்றியதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்தோஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.