ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது 7-வது நாளை எட்டியுள்ள இந்தப் போரில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தப் போரின் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால், 90 சதவீத கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இருப்பினும், இந்திய நகரங்களில் தற்போதைக்கு எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்களுக்குத் தற்காலிக அனுமதி அளிக்கப்படுகிறது. இது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், ரஷ்யாவிற்கு இதனால் பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது.
இந்தியா எங்களின் முக்கியமான கூட்டாளியாகும்; வரும் காலங்களில் அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
மேலும் இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதத்தை வளைகுடா நாடுகளிலிருந்தே பெறுகிறது. தற்போது நிலவும் அசாதாரண சூழலால், நாட்டின் எரிசக்தி இருப்பு மற்றும் விநியோக நிலைமையை இந்திய அரசு ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
