அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஈரான் தனது பொருளாதாரத்தை முட்டுக்கொடுக்க பிட்காயின் சுரங்கத் தொழிலை மிகப்பெரிய நிதி கருவியாக மாற்றியுள்ளது.
ஈரானில் மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், சுமார் $1,300 செலவில் ஒரு பிட்காயினை அந்நாட்டினால் உருவாக்கி விட முடிகிறது. தற்போது ஒரு பிட்காயின் விலை $73,000-ஐ நெருங்குவதால், ஒரு நாணயத்திற்கு மட்டும் $70,000 வரை லாபம் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் சர்வதேச வங்கி முறையான ‘சுவிஃப்ட்’ (SWIFT) உதவியின்றி, டிஜிட்டல் வாலட்கள் மூலம் எல்லைகளைக் கடந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பரிமாற்றம் செய்ய ஈரான் இந்த உத்தியைப் பயன்படுத்துகிறது.
பிளாக்செயின் ஆய்வு நிறுவனமான ‘செயினலிசிஸ்’ (Chainalysis) தகவல்படி, ஈரானின் கிரிப்டோ சந்தை 2025-ல் சுமார் $7.78 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. குறிப்பாக பிப்ரவரி இறுதி மற்றும் மார்ச் தொடக்கத்தில் ஈரானின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்றகங்களில் இருந்து வழக்கத்தை விட 8 மடங்கு அதிவேகமாக $10.3 மில்லியன் பணம் வெளியேறியுள்ளது பிளாக்செயினில் பதிவாகியுள்ளது. இந்தத் திடீர் நகர்வுகள் ஈரானின் ரகசிய நிதி பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தியுள்ளன.
உலகளாவிய தடைகளைத் தகர்க்க டிஜிட்டல் நாணயங்கள் ஒரு வலுவான புவிசார் அரசியல் கருவியாக உருவெடுத்துள்ளது பாதுகாப்பு வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
