அசாம் மாநிலத்தில் பயிற்சியின் போது மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
இந்திய விமானப்படையின் ‘சுகோய்’ (Su-30 MKI) ரக போர் விமானம் ஒன்று, இன்று வழக்கமான பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தது. அசாம் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய அணித்தலைவர் அனுஜ் (Squadron Leader Anuj), விமானப்படை தளபதி பூர்வேஷ் துரக்கர் (Flight Lieutenant Purvesh Durakkar) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவீன தொழில்நுட்பம் கொண்ட சுகோய் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வானிலை மாற்றமா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
