தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை  இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்த முதலமைச்சர் ஸ்டாலின், தேமுதிக மற்றும் ஓபிஎஸ் அணியை கூட்டணியில் இணைத்து தனது பலத்தை நிரூபித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் மூலம் திமுக தலைமையிலான கூட்டணி 21 கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராகியுள்ளது.

இந்தக் கூட்டணி குறித்து விமர்சனம் செய்துள்ள பாஜகவின் திருச்சி சூர்யா, காங்கிரஸ் 28 தொகுதிகளைப் பெற்றாலும் அதில் 8 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.

திமுக தனது இலக்கான 200 தொகுதிகளில் கவனம் செலுத்துவதாகவும், காங்கிரஸை அரவணைப்பது போல் நடித்து அக்கட்சியை திமுக முதுகில் குத்தும் என்றும் அவர் சாடியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி சேருவதைத் தடுத்த திமுக, இறுதியில் காங்கிரஸை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் என்றும், எதையும் யோசிக்காமல் எடுத்த முடிவால் காங்கிரஸ் அழிவை நோக்கிச் செல்வதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.