தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துகள் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வருவதற்கு முன்பாக, தனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களை முறையாகக் கட்டுப்படுத்தி விஜய் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், தவெக மாநாடுகளில் தொண்டர்கள் வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்பட்டிருப்பது நிம்மதியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
விஜய் எழுப்பிய சில கேள்விகள் மிகவும் நியாயமானவை என்று பாராட்டிய தமிழிசை, குறிப்பாக ‘நீட்’ விலக்கு சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஏன் வாக்குறுதி கொடுத்தீர்கள் என திமுக-வை நோக்கிக் கேட்ட கேள்வியையும், சிலிண்டர் மானியம் மற்றும் கரும்பு கொள்முதல் விலை குறித்த கேள்விகளையும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், டெல்லி அணி மற்றும் சென்னை அணி என்று விஜய் விளையாட்டாகச் சொல்வதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றும், தமிழகம் உண்மையான வளர்ச்சி அடைய வேண்டுமானால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
