சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துறை நேற்று காலமானார். எண்பத்தி ஏழு வயதான இவர் பாஞ்சாலங்குறிச்சியில் வசித்து வந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனின் நான்காவது வாரிசான வீரபாண்டிய துறையின் மகனான இவர் அந்த பரம்பரையின் ஐந்தாவது தலைமுறை வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தியாகிகளுக்கான ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காக ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள அஞ்சலகத்திற்கு இவர் சென்றுள்ளார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
