தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதி நேர ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இன்று ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.12,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியாக, மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

​இந்த அறிவிப்பு சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நீண்ட நாட்களாக ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராடி வந்த ஆசிரியர்களுக்கு, இந்த நிதிநிலை உயர்வு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில், அரசின் இந்த அறிவிப்பு ஆசிரியர் குடும்பங்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.