மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் ₹5,083 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ₹2,901 கோடி செலவில் ஆறு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.

இந்த நவீன ஹெலிகாப்டர்கள் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பு, மீட்புப் பணிகள் மற்றும் மீனவர் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் உள்நாட்டுத் தொழில்கள் வளர்ச்சி அடைவதுடன், சுமார் 65 லட்சம் மணிநேர வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு ஒப்பந்தமாக, இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்களை வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க ₹2,182 கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து ‘ஷ்டில்’  ஏவுகணை அமைப்புகள் வாங்கப்பட உள்ளன.

எந்த வகையான வானிலையிலும் எதிரி விமானங்கள் மற்றும் ட்ரோன்களைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

உலகளாவிய சூழல் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தனது எல்லைப் பாதுகாப்பில் இந்தியா எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை இந்த அதிரடி நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.