அறிவாலயத்திற்கும் டெல்லிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் புகைச்சல் ஆரம்பமாகிவிட்டது. திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில், பின்னணியில் ஒரு மெகா ‘ஆபரேஷன்’ நடக்கப்போவதாக வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தைத் திணற வைத்துள்ளன. ஒருவேளை காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தால், அக்கட்சியை உடைத்து திமுக ஆதரவு காங்கிரஸாரைத் தன் பக்கம் இழுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சரியாக 1996-ல் மூப்பனார் பிரிந்து வந்து தமாகா ஆரம்பித்தது போன்ற ஒரு பிளானை திமுக கையில் எடுத்திருப்பதாக ராகுல் காந்திக்கு ரகசியத் தகவல் போயுள்ளதாம்.

​இதன் எதிரொலிதான் ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தில் எதிரொலித்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எப்போதுமே ‘சகோதரர் ஸ்டாலின்’ என உருகும் ராகுல், இந்த முறை அந்த வார்த்தையைத் தவிர்த்துவிட்டு மேம்போக்காக வாழ்த்து சொன்னதன் பின்னணியில் இந்த ‘கட்சி உடைப்பு’ பயம் இருப்பதாகப் பேசப்படுகிறது. “கூட்டணியை விட கட்சி முக்கியம்” என ராகுல் நினைக்கத் தொடங்கிவிட்டதால், தமிழக அரசியலில் இப்போது ‘யார் பக்கம் யார்?’ என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.