ஓபிஎஸ் தரப்பில் இருந்து தப்பித்து வருபவர்களால் அதிமுகவில் மீண்டும் ஒரு ‘தாய் கழக’ வைபவம் களைகட்டியுள்ளது. சமீபத்தில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இப்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் முக்கிய அரசியல் முகமான செஞ்சி வே. ஏழுமலையும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். ஓபிஎஸ் தரப்பு மெல்ல மெல்ல தி.மு.க-வை நோக்கி நகர்ந்த நிலையில், கொள்கை பிடிப்புள்ள பழைய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி தலைமையே சரி என முடிவெடுத்து மீண்டும் இபிஎஸ் கையைப் பிடித்துள்ளனர்.

​முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏ எனப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த செஞ்சி ஏழுமலை, செஞ்சி பகுதியில் அசைக்க முடியாத செல்வாக்கு கொண்டவர். இவர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்துள்ளது. “தாய் கழகமே சரணம்” என்று கூறி இபிஎஸ்-ஸை நேரில் சந்தித்த ஏழுமலையின் இந்த அதிரடி முடிவு, ஓபிஎஸ் முகாமுக்கு மற்றுமொரு பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.