உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஓடும் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட சிறிய தகராறு, 22 வயது இளைஞரின் உயிரைப் பறித்துள்ளது. காஸ்கஞ்ச் – மதுரா பயணிகள் ரயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்த கையிரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஜதின் என்ற இளைஞருக்கும், கஜேந்திரா என்பவருக்கும் இடையே ரயிலின் நடைபாதை அமர்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராயா ரயில் நிலையத்தை ரயில் கடந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கஜேந்திரா இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக போலீஸார் கூறுகின்றனர். ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த ஜதினுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரசு ரயில்வே போலீஸார், அவரை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். ஆனால் படுகாயமடைந்த நிலையில் இருந்த ஜதின் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே போலீஸார், கஜேந்திராவை கைது செய்துள்ளனர். ஜதினை கொலை செய்யும் நோக்கத்துடன் தள்ளியதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரயிலின் நடைபாதை அமர்வது தொடர்பாக தொடங்கிய சாதாரண வாக்குவாதம், ஓடும் ரயிலில் இளைஞர் கீழே விழும் அளவுக்கு விபரீதமாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகளுக்கு இடையேயான சிறிய தகராறுகள் கூட எவ்வளவு ஆபத்தான முடிவுக்கு செல்லக்கூடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.