நாம் சாப்பிடும் உணவானது நமது குடலின் ஆரோக்கியத்தில் நேரடியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்க அன்றாட உணவில் சில சத்தான பொருட்களைச் சேர்ப்பது அவசியம். அமெரிக்காவின் ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் மற்றும் இந்தியாவின் எய்ம்ஸ் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற பிரபல குடல் நோய் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 சிறந்த உணவுகளைப் பரிந்துரைத்துள்ளார்.
முதலாவதாக, தயிர் மற்றும் மோரில் இயற்கையாகவே நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (Probiotics) நிறைந்துள்ளன. இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.
இரண்டாவதாக, இட்லி, காஞ்சி கிம்ச்சி மற்றும் சாப்கிராட் போன்ற நொதித்தல் முறை உணவுகள் உடலுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. நொதித்தல் செயல்பாட்டின் மூலம் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்குக் சுலபமாகக் கிடைப்பதுடன், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையையும் இது பாதுகாக்கிறது.
மூன்றாவதாக, நன்கு பழுத்த வாழப்பழத்தை விடக் பச்சை வாழக்காயில் ‘ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்’ அதிகமாக உள்ளது. இது பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்குச் சிறந்த உணவாகச் செயல்பட்டு, பெருங்குடல் சுவரைப் பாதுகாக்கும் கொழுப்பு அமிலங்களை உருவாக்க உதவுகிறது.
நான்காவதாக, பப்பாளிப் பழத்தில் ‘பபைன்’ என்ற என்சைம் உள்ளது. இது உணவில் உள்ள புரதங்களை எளிதில் செரிமானம் செய்ய உதவுவதுடன், குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. ஐந்தாவதாக, சுண்டல், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்ற நார்ச்சத்துமிக்க பயறுகள் குடலுக்குப் ‘பிரிபயோடிக்’ ஆகச் செயல்பட்டு குடலின் பாதுகாப்புச் சுவரை பலப்படுத்துகின்றன.
