கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுக்கு விலை உயர்ந்த கேடிஎம் பைக் பரிசளிக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காகத் திட்டமிட்ட அந்த 19 வயது மாணவி ஆர். ஜாய் பிரின்சி, கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது தந்தையின் நண்பரான தமிழ்வாணன் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு யாரும் எதிர்பாராத நேரத்தில், வார்ட்ரோப்பில் வைக்கப்பட்டிருந்த 9 சவரன் (72 கிராம்) தங்க நகைகளை யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்றுள்ளார்.

​திருடிய நகையை பொள்ளாச்சியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் விற்று சுமார் 2.5 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு, தனது காதலனான ஜனகன் சிவாவிற்கு ஆசையாக புதிய கேடிஎம் மோட்டார் சைக்கிளை வாங்கிப் பரிசளித்துள்ளார். பைக் வாங்கிய சந்தோஷத்தில், அந்த ஜோடி ஷோரூமில் வைத்து பைக் வாங்குவதைப் போல கெத்தாக ஒரு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியது.

​இதனிடையே வீட்டில் இருந்த 9 சவரன் நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் தமிழ்வாணன், பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கைப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இணையத்தில் வைரலான அந்த பைக் ஷோரூம் வீடியோ போலீசாரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. உடனடியாக மாணவி ஜாய் பிரின்சியைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நகையைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

​இதையடுத்து அந்த மாணவியைக் கைது செய்த போலீசார், கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை முடுக்கப்பட்டுள்ள நிலையில், மாணவி கைதான செய்தி அறிந்ததும் தலைமறைவான அவரது காதலன் ஜனகன் சிவாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காதலனுக்கு பைக் வாங்கித் தரப்போய் கல்லூரி மாணவி சிறைக்குச் சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.