சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரதீப் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரதீப்பின் மனைவி ப்ரீத்தி குழந்தைகளை விட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் கடந்த பிப்ரவரி பதினான்காம் தேதி தனது மகள்கள் லியா மற்றும் சுபிக்ஷாவுடன் மாமல்லபுரம் வந்து அங்குள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
அப்போது சென்னையில் உள்ள தனது உறவினருக்கு வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்யப்போவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். பதறியடித்துக்கொண்டு மாமல்லபுரம் விரைந்து வந்த உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் விடுதி கதவை உடைத்துப் பார்த்தபோது இரண்டு பெண் குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
தற்கொலை முயற்சியில் மயங்கிக் கிடந்த பிரதீப்பை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இரண்டு வார சிகிச்சைக்குப் பின் குணமடைந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் மனைவி மீதுள்ள கோபத்தில் குழந்தைகளை குளியலறை வாளியில் மூழ்கடித்துக் கொலை செய்ததாகவும் பின்னர் ரசாயனம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
