இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதின்ம வயதினரின் பாதுகாப்பு மற்றும் மனநலனை உறுதி செய்ய மெட்டா நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தற்கொலை எண்ணம் அல்லது தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் வகையிலான தேடல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன்படி ஆபத்தான சொற்களை மீண்டும் மீண்டும் தேட முயற்சிக்கும் இளைஞர்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு உடனுக்குடன் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். இந்தக் கண்காணிப்பு வசதியானது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே செயல்படுத்தப்படும்.

பிள்ளைகள் எத்தகைய தேடல்களைச் செய்தார்கள் என்பதுடன் அத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.

முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அமல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.