புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர், தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி வ.உ.சி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அழகர் என்பவரது மகன் புவியரசன் (15). இவர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.
நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு (Practical Exam) நடைபெறவிருந்தது. இதற்காகக் காலையிலேயே பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, மகிழ்ச்சியுடன் பள்ளிக்குப் புறப்பட்டார் புவியரசன்.
ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் புவியரசன் ஏறியுள்ளார். காலை நேரம் என்பதால் பேருந்தில் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இடமில்லாத காரணத்தால் புவியரசன் பின்பக்கப் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பேருந்துவளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக புவியரசன் நிலைதடுமாறி படிக்கட்டிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
காலையில் ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத் தேர்வு எழுதச் சென்ற மகன், பிணமாகக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது மருத்துவமனையில் இருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த வேகத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி நேரங்களில் மாணவர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்” எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
