ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்த 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுடன், மேலும் 12 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் குடிநீர் பிரச்சனையால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட 105 குடும்பங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் ஒரே ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து பால் வாங்கியது தெரியவந்தது.
அந்தப் பால் கலப்படம் செய்யப்பட்டிருந்ததால், அதைக் குடித்த முதியவர்களின் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மரணம் நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பால் விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரது சட்டவிரோதப் பால் பண்ணையையும் பறிமுதல் செய்துள்ளனர்.
விஜயவாடாவிலிருந்து வந்துள்ள சிறப்புக் குழுக்கள் பால் மாதிரிகளைச் சேகரித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பால் விற்பனையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்ட 75 மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்த பின்னரே, பாலில் என்ன மாதிரியான வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டன என்பது குறித்த முழுமையான விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
