திமுக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைய முடியாமல் போனதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்ற கேள்விக்குத் திருமாவளவன் அதிரடி பதில் அளித்துள்ளார். திமுக அப்படி ஒரு முடிவை எடுத்தால், தாங்கள் கூட்டணியில் நீடிப்பது குறித்துத் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்று மட்டுமே சொன்னதாகவும், மாறாக திமுகவுக்கு எந்தவிதமான நெருக்கடியையும் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவுக்கு பாமக தேவைப்பட்டால் அவர்கள் துணிச்சலாக அந்த முடிவை எடுக்கலாம், அதில் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

​தொடர்ந்து பேசிய அவர், 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வருவதால், அவர்களோடு ஒருபோதும் இணையப் போவதில்லை என்பதில் விசிக உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். விசிக நெருக்கடி கொடுத்ததால் தான் பாமக கூட்டணியில் இடம்பெறவில்லை என்ற கருத்து முற்றிலும் தவறானது என்றும், திமுக எடுக்கும் முடிவுகளில் தலையிட தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திருமாவளவனின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.