டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டு பகுதியில், இளைஞர் காங்கிரஸார் திடீரென மேலாடையின்றி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டில் ஸ்பெயின், இலங்கை, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தப் புகாரை முன்வைத்தே இந்த மேலாடையற்ற போராட்டம் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே புகுந்து கோஷமிட்ட இளைஞர் காங்கிரஸாரை டெல்லி போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
