பெங்களூருவில் 26 வயது மதிக்கத்தக்க மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர், 18 வயது மாணவனின் வக்கிரமான பாலியல் அத்துமீறலுக்குப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ராமமூர்த்தி நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அந்தப் பெண்ணின் மரணம், முதலில் தற்கொலை என்று கருதப்பட்டது.

ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீசார், பக்கத்து வீட்டில் வசித்து வந்த குரேசி என்ற 18 வயது மாணவனைக் கைது செய்தனர். அந்தப் பெண் தன்னை பார்த்துச் சிரித்ததை தவறாகப் புரிந்துகொண்ட அந்த மாணவன், அவர் தன்னை காதலிப்பதாகக் கருதி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான்.

மேலும் சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த குரேசி, அவரைப் பின்னால் இருந்து கட்டிப்பிடித்துப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். அவரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், சோபாவின் ஓரத்தில் தலை மோதியதில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

எனினும், உயிரிழந்த பிறகும் அந்தப் பெண்ணின் மீது தனது வக்கிர ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்ற அந்த மாணவன், கொலையை மறைக்க படுக்கையறைக்குத் தீ வைத்துள்ளான். தடயங்களை அழிக்கத் திட்டமிட்ட போதிலும், பெண்ணின் செல்போனை எடுத்துச் சென்றதன் மூலம் போலீசாரிடம் சிக்கிய அந்த இளைஞனின் செயல், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.